செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மாநகராட்சி டெண்டர் முறைகேடு- அமைச்சரை எதிர் மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-01-10 10:50 GMT   |   Update On 2020-01-10 10:50 GMT
மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் ரூ. 300 கோடி செலவில் 3 ஆயிரத்து 800 சாலைகள் அமைப்பதற்காக 48 டெண்டர்களும், ரூ.290 கோடி செலவில் மழை நீர் வடிகால்கள் கட்டுவதற்காக 73 டெண்டர்களும் கடந்த 2018-ம் ஆண்டு கோரப்பட்டன.

இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுசம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளதாகவும், சில ஒப்பந்ததாரர் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும், டெண்டர் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறி, 2018 நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதாகவும், அந்த புகாரின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது குறித்தும், தங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்படாதது குறித்தும் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள், மாநகராட்சி ஆணையருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கும் புகார் அளித்துள்ளனர்

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக, 2019 மார்ச் மாதம் ஆரம்பகட்ட விசாரணை பதிவு செய்யப்பட்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் விசாரணை நடந்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆரம்ப கட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும், மனுவுக்கு பதிலளிக்கவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும், லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பிய புகாரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளதால், அமைச்சரையும் எதிர் மனுதாரராக சேர்க்க அனுமதி அளிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவில் கூறி உள்ளனர்.
Tags:    

Similar News