search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெண்டர் முறைகேடு"

    • முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி, 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
    • கபில்சிபில் இப்போது லஞ்ச ஒழிப்புதுறைக்கு ஆஜராவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    டெல்லி:

    கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடை பெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புதுறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி, 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது.

    மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேப்போன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்ப டுகிறது எனவும் கடந்த ஜூலை 18-ந் தேதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வானது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள், அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் இப்போது லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆஜராவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    இந்த வழக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாக தி.மு.க. சார்பில் கபில்சிபில் ஆஜராகி இருந்தார் என்றும் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக எப்படி ஆஜராக முடியும்? என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்த கபில்சிபில், நான் ஆஜராவது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பிடிக்கவில்லை என்றால் வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றார்.

    கடைசியாக கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? இந்த வழக்கு என்ன? என்பது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கிறோம். அப்போது மீண்டும் வாருங்கள் என்று வழக்கை தள்ளி வைத்தனர்.

    எனவே இந்த வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தெரிகிறது.

    • சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
    • நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியேறார் உத்தரவு.

    சென்னை, கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்த பணிகளை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் அ.தி.மு.க. முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பெரும் ஊழல் செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் புகார் செய்தனர்.

    அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டிலும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர்.

    அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ், எஸ்.பி.வேலுமணி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தவே, வக்கீல் ஜெ.கருப்பையாஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். அந்தத் தீர்ப்பு, இன்று பிற்பகல் வழங்கப்படும் என ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்தது.

    அதன்படி, இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த உத்தரவிட்டது.

    நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியேறார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

    • முதல்வராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து டெண்டர்களை வழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
    • வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள நடைபெற்ற டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    குறிப்பாக ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு அதற்கான ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை-செங்கோட்டை-கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுப்படுத்தி பலப்படுத்தும் ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம், வெங்கடாஜலபதி அன்ட்கோ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதே நிறுவனத்துக்கு ரூ.200 கோடி மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தமும் வழங்கப்பட்டு உள்ளது.

    முதல்வராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த டெண்டர்களை வழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

    நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு பட்டியலிடக் கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு நேற்று முறையீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆர்.எஸ். பாரதி தரப்பில், 'இந்த வழக்கில் தங்களது வக்கீலை மாற்ற வேண்டி இருப்பதால் தங்களுக்கு 3 வார கால அவகாசம் தர வேண்டும்' என்று கோரப்பட்டது.

    அதே போல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல், 'இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்பது தொடர்பான தகவல் எங்களிடம் பகிரப்படவில்லை. எனவே நாங்கள் விசாரணைக்கு தயாராகவில்லை. எனவே எங்களுக்கும் அவகாசம் வேண்டும்' என்று கூறினார்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு 3 வாரம் கால அவகாசம் அளிக்க முடியாது என்று கூறினார்கள். மேலும் வழக்கை வருகிற ஆகஸ்டு 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    புதுடெல்லி:

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    இது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதி மன்றத்தில் கடந்த 2018-ல் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை, தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார்.

    குறிப்பாக ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த பணிக்கான ஒப்பந்தம், முதல்வரின் உறவினர் ராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை-செங்கோட்டை -கொல்லம் நான்கு வழிச் சாலையை விரிவுப்படுத்தி, பலப்படுத்த ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் 'வெங்கடாஜலபதி அண்ட் கோ' என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சேகர்ரெட்டி, நாகராஜன், பி.சுப்பிரமணியம் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மூலம், ரூ.200 கோடி மதிப்பில், மதுரை ரிங் ரோடு பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-வாலாஜா சாலை வரையுள்ள 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற ரூ.200 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம், 'எஸ்பிகே அண்ட் கோ' என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களின் கீழ் வரும் சாலைகளில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் 'வெங்கடாஜலபதி அண்ட் கோ' நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட சுமார் ரூ.4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள், பழனிசாமியின் உறவினர் பி.சுப்பிரமணியம், நாகராஜன், செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டு, பெரிய அளவில் முறைகேடு நடந்து உள்ளன.

    இதன்மூலம் முதல்-அமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனது கட்டுப்பாட்டில் இருந்த நெடுஞ்சாலைத்துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஆதாயம் அடைந்துள்ளார். பொது ஊழியர் என்ற முறையில், 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படி அவர் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த துறையும் அவரிடமே இருந்தது. எனவே, இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கடந்த 2018 அக்டோபரில் அளித்த தீர்ப்பில், "முதல்-அமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. சமீபத்தில் எஸ்.பி.கே. நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×