செய்திகள்
அசோகன்

மேலூர் அருகே அமமுக பிரமுகர் கொலை- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

Published On 2019-12-19 05:11 GMT   |   Update On 2019-12-19 05:11 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே இன்று அதிகாலை அ.ம.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளப்பட்டியைச் சேர்ந்தவர் அசோகன் (வயது50). முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரான இவர் அ.ம.மு.க. பிரமுகர். இவருக்கு அருண்தேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

தினமும் காலையில் அசோகன் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுடன் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 5 மணி அளவில் அசோகன் தனது உறவினர் கார்த்திகைச்சாமி என்பவருடன் அழகர்கோவில் ரோட்டில் நடைபயிற்சி சென்றார்.

செட்டியார்பட்டி மதனம்பாறை என்ற இடத்தில் சென்றபோது 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் கார்த்திகைச்சாமியை சரமாரியாக தாக்கி விரட்டினர்.

பின்னர் அந்த கும்பல் அசோகனை துரத்தியது. உயிருக்கு பயந்த அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து விரட்டிச் சென்ற கும்பலிடம் அசோகன் சிக்கவே அவரை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அசோகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

தகவல் அறிந்த மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ் மற்றும் மேலவளவு போலீசார் சம்பவ இடம் வந்தனர். அவர்கள் அசோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

அசோகன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அசோகனின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய இங்கு போதிய வசதி இல்லை. எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நடேசன் மற்றும் போலீசார் ஆம்புலன்சு மூலம் அசோகன் உடலை மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.



அப்போது ஆஸ்பத்திரியில் கூடியிருந்த உறவினர்கள் மற்றும் கட்சியினர் மதுரைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்சு முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

அசோகனை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் அ.ம.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டு வந்து மேலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அ.ம.மு.க. பிரமுகர் கொலையால் அ.வல்லாளப்பட்டி பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News