செய்திகள்
திருநங்கை நமீதாஅம்மு

உலக அழகி போட்டியில் திருநங்கை நமீதாஅம்மு பங்கேற்பு

Published On 2019-12-06 08:43 GMT   |   Update On 2019-12-06 08:43 GMT
ஸ்பெயின் நாட்டில் திருநங்கைகளுக்காக நடக்கும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் திருநங்கை நமீதாஅம்மு பங்கேற்கிறார்.
சென்னை:

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து வெண்ணிலா தம்பதிக்கு பிறந்தவர் நமிதா. திருநங்கையான இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தவர்.

தற்போது மாடலிங் செய்கிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 2014-ல், ‘மிஸ் சென்னை’யாக தேர்வு செய்யப்பட்டார். 2015-ல், ‘மிஸ் கூவாகம்’ பட்டம் பெற்றார்; 2017ல், பெங்களூரில் நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றார். 2018-ல், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்றார்.

‘நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 14-ந்தேதி, ஸ்பெயின் நாட்டில் நடக்கும் திருநங்கைகளுக்காக நடக்கும் உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்கிறார். இதற்காக, ஸ்பெயின் நாட்டின், பார்சிலோனா நகரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து திருநங்கை நமீதா கூறியதாவது:-

எனக்கு சிறு வயதில் இருந்தே மாடலிங் மீது ஆர்வம் உண்டு. நான் அதற்கான திறமையை வளர்த்துக் கொண்டேன். மாடலிங் குறித்து, மற்றவர்களுக்கும் கற்று தருகிறேன். திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டி எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்தியா சார்பில் யாரும் பங்கேற்றது இல்லை. முதன் முறையாக, நான் பங்கேற்பது மிகவும் பெருமை அளிக்கிறது.

எனது இந்த முயற்சிக்கு, பெரிய அளவில் யாரும், ‘ஸ்பான்சர்’ செய்யவில்லை. என் பெற்றோர் முயற்சியாலும், பல்வேறு கஷ்டங்களை சந்தித்தும், இந்தப் போட்டியில் பங்கேற்கிறேன். பெண்கள் மற்றும் திருநங்கையர், தங்களை எப்போதும் அழகாக வைத்துக் கொள்வதில், அதிக ஆர்வம் காட்டுவர். எனவே, எதிர்காலத்தில் மாடலிங் குறித்த பள்ளி துவங்கி, திருநங்கையர் சமூகம் உயர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News