செய்திகள்
பல்லடம்-மங்கலம் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்திருப்பதை படத்தில் காணலாம்.

கோவை, பல்லடத்தில் பலத்த மழை: கோவில்- வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது

Published On 2019-11-30 05:20 GMT   |   Update On 2019-11-30 05:20 GMT
கோவை மற்றும் பல்லடத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கோவில், வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

அண்ணா நகர், காமராஜ் நகர், பனப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாளிகள் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதே போல் பல்லடம்-மங்கலம் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலுக்குள் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து புகுந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.

உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.

கோவை மாநகர் பகுதிகளான ராமநாதபுரம், ரெயில்நிலையம், காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

சுந்தராபுரம், கோவைப்புதூர், போத்தனூர், குனியமுத்தூர், இடிகரை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர் மழை காரணமாக கோவையில் உள்ள குறிச்சி குளம், உக்கடம் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
Tags:    

Similar News