செய்திகள்
சிறுத்தைப்புலி தாக்கியதில் பலியான ஆடுகள்

சிறுத்தை புலி தாக்கி 25 ஆடுகள் உயிரிழப்பு - கிராம மக்கள் அச்சம்

Published On 2019-11-13 05:49 GMT   |   Update On 2019-11-13 10:19 GMT
போடி அருகே சிறுத்தைப்புலி தாக்கி 25 ஆடுகள் இறந்தன. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது முந்தல் கிராமம். மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது.

இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். எனினும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் சிறுத்தைப்புலி தாக்கி 25 ஆடுகள் பலியானது. முந்தல் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் ஆடு, மாடு வளர்ப்புதொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 ஆடுகளும், 20 கன்று குட்டிகளும் உள்ளன. இந்த ஆடுகள் மலை அடிவார பகுதியில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று அப்பகுதி சிறுவர்கள் வெடி போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் கலைந்து மலைக்குள் ஓடிவிட்டன. உடனே பிச்சைமணி அந்த ஆடுகளை தேடி சென்றார்.

அப்போது 25 ஆடுகள் சிறுத்தைப்புலி தாக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். மேலும் அப்பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டு சென்றனர். சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

Similar News