செய்திகள்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசு அனுமதி பெற்றே சிங்கப்பூர் சென்றோம்- கவர்னர் கிரண்பேடிக்கு நாராயணசாமி பதில்

Published On 2019-11-12 11:56 GMT   |   Update On 2019-11-12 11:56 GMT
மத்திய அரசிடம் அனுமதி பெற்று தனிப்பட்ட பயணமாக சொந்த செலவில் சிங்கப்பூர் சென்று வந்ததாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் கடந்த 6-ம் தேதி 4 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்று திரும்பினர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி பெறாமல் சிங்கப்பூர் சென்றுள்ளார் என கவர்னர் கிரண்பேடி குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக மத்திய அரசிடம் புகார் செய்யவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுவை திரும்பிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, நாங்கள் அரசு முறை பயணமாக செல்லவில்லை. தனிப்பட்ட பயணமாக சொந்த செலவில் சென்று வந்துள்ளதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

நாங்கள் சிங்கப்பூருக்கு அனுமதி பெறாமல் சென்றுள்ளதாக செய்தித்தாள்களில் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இணை அமைச்சராக நான் பணியாற்றியவன்.

மத்திய மந்திரி, முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எந்த விதிமுறைகளின்கீழ் அனுமதி பெற்று வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

கடந்த 24.10.19-ல் எங்களின் சிங்கப்பூர் பயணம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அனுமதி தரக்கூடிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பினேன். 29.10.19ல் வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

எங்கள் சொந்த செலவில்தான் விமான டிக்கெட் எடுத்தோம். சிங்கப்பூரில் தங்கினோம். யாருடைய உதவியும் பெறவில்லை. விதிகளுக்கு உட்பட்டே சென்றோம். ஆனால் அனுமதி பெறாமலும், தெரிவிக்காமலும் சென்று விட்டதாக கவர்னர் தெரிவித்துள்ளார். எங்கள் பயணம் குறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு பயண விபரத்தை தெரிவித்து சென்றுள்ளோம்.

புதுவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த பயணம் சென்றோம். புதுவை வளர்ச்சி பெறக்கூடாது என நினைப்பவர்கள் யார்? என்பதை மக்கள் கருத்திற்கே விட்டு விடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News