செய்திகள்
கோப்பு படம்

பயிற்சி வகுப்பில் மோதலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு

Published On 2019-11-12 09:19 GMT   |   Update On 2019-11-12 09:19 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மோதலில் ஈடுபட்ட தமிழ் பட்டதாரி ஆசிரியரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இதில் பயிற்சி சம்பந்தமாக ஆசிரியர்களுக்கிடேயே வழக்காடு மன்றம் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பு ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக பேசினார்கள். இதற்கு மற்றொரு தரப்பு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி மாவட்ட கல்வி அலுவலருக்கு முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் பயிற்சி நடந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில் மோதலுக்கு காரணமாக இருந்த குத்தாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியரான நடராஜனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் உத்தரவிட்டார்.

காங்கேயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் வின்சென்ட். இவர் பணி ஓய்வு பெறுகிற காலம் முடிவடைந்த பிறகும் மாணவர்களின் நலன்கருதி இந்த கல்வி ஆண்டு முழுவதும் பணிநீட்டிப்பு செய்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மோதலில் ஈடுபட்டதாக அவரது பணிநீட்டிப்பு ஆணை யையும் ரத்து செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News