செய்திகள்
கோப்பு படம்

கடையநல்லூர் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் 2 பேர் பலி

Published On 2019-11-11 12:09 GMT   |   Update On 2019-11-11 12:09 GMT
கடையநல்லூர் அருகே போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை, நவ.11-

அயோத்தி வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டதால் நெல்லை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்காக விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் பட்டாலியனை சேர்ந்த போலீசார் நேற்று முன்தினம் காலை ஒரு போலீஸ் வாகனத்தில் கடைய நல்லூருக்கு வந்தனர்.

அந்த வாகனம் கடைய நல்லூரில் போலீசாரை இறக்கி விட்டு விட்டு, மீண்டும் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியில் போலீஸ் வாகனம் வந்த போது, திடீரென்று டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் இருந்த கொடிக்கம்பத்தில் மோதியது.

அதன்பிறகும் நிற்காமல் ஓடி அங்குள்ள பஸ் நிறுத்தத் தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மைதீன்பிச்சை மனைவி மல்லிகா என்ற ஆயிஷா பீவி (வயது39) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் ஆயிஷா பீவியின் மகள் இர்பானா ஆசியா (15), அதே பகுதியை சேர்ந்த கன்சாள் மகரிபா பீவி (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் போலீஸ் வாகனத்தில் இருந்த முத்து, ராசுகுட்டி ஆகிய போலீசாரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங் கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர். மேலும் விபத்தில் பலியான ஆயிஷா பீவியின் உடலை சொக்கம்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடைய நல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விபத்து குறித்து அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் ஏராள மானோர் மதுரை-தென்காசி நெடுஞ்சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விபத்தில் பலியான ஆயிஷா பீவி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், திரிகூடபுரம் பகுதியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும், சாலையை விரிவு படுத்த வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஆயிஷா பீவி குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை ஆயிஷாபீவி குடும்பத்தினரிடம்தென்காசி உதவி கலெக்டர் பழனிக்குமார் வழங்கினார்.

இந்நிலையில் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கன்சாள் மகரிபா பீவி நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இது குறித்து சொக்கம் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த கன்சாள் மகரிபா பீவிக்கு திருமணமாக வில்லை. அவர் தனது தந்தை தீன் ஒலியின் ஆதர வில் இருந்து வந்தார். அவர் உயிரிழந்தது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கன்சாள் மகரிபா பீவி குடும்பத்திற்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News