செய்திகள்
எரிந்து கிடக்கும் கார்.

கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழிலதிபரை கொலை செய்து, காரில் உடல் எரிப்பு மனைவி-மகன் கைது

Published On 2019-11-07 16:27 GMT   |   Update On 2019-11-07 16:27 GMT
க.பரமத்தி அருகே கள்ளக்காதலை கைவிடாத தொழிலதிபரை கொலை செய்து காரில் வைத்து எரித்த மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
க.பரமத்தி:

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே குப்பம்-வேலம்பாளையம் செல்லும் சாலையோரத்தில் நேற்று அதிகாலை கார் ஒன்று எரிந்த நிலையில் நின்றிருந்தது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து க.பரமத்தி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையிலான போலீசார் வந்து காரை பார்வையிட்டனர். அப்போது காரின் பின்பக்க இருக்கையில் எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதையடுத்து எரிந்த நிலையில் கிடந்தவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கொலையாளிகள் குறித்த தடயங்கள் ஏதும் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். அதில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர், நொய்யல் குறுக்கு சாலையை சேர்ந்த ரெங்கசாமி (வயது 51) என்பதும், இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பழைய லாரிகளை வாங்கி புதுப்பித்து விற்பது மற்றும் பாக்குமரத்தட்டு தயாரித்து விற்பது ஆகிய தொழில்களை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ரெங்கசாமியின் மனைவி கவிதா (41), மகன் அஸ்வின்குமார் (19) ஆகியோர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து நடந்த தீவிர விசாரணையில், ரெங்கசாமிக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரை கவிதா மற்றும் அஸ்வின்குமார் இருவரும் சேர்ந்து வீட்டிலேயே வைத்து கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் உடலை காரில் எடுத்து சென்று தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து கவிதா மற்றும் அஸ்வின்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அரசு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு ரெங்கசாமியின் உடலை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தையை கொலை செய்தது குறித்து அஸ்வின்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நான் கரூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தைக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் அவருக்கும், எனது தாய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வீட்டின் அருகேயுள்ள கள்ளக்காதலி வீட்டில் எனது தந்தை உல்லாசமாக இருந்தார். இதனை நேரில் கண்டதால் எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இது குறித்து தாயாரிடம் தெரிவித்தபோது, அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். நேற்று முன்தினம் (5-ந்தேதி) மாலை அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு எனது தந்தை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது கள்ளக்காதல் குறித்து கேள்வி எழுப்பியதால் எனது தாயை அடித்து உதைத்தார்.

இதனை கண்டு கோபமடைந்த நான், எனது தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் எனது தாய் உதவியுடன், தந்தையின் உடலை போர்வையில் சுற்றி காரில் ஏற்றினேன். பின்னர் அந்த காரை குப்பம்-வேலம்பாளையம் செல்லும் சாலையோரமாக நள்ளிரவில் எடுத்து சென்றபோது திடீரென கார் பள்ளத்தில் சிக்கியது. இதைத்தொடர்ந்து போலீசில் மாட்டி விடுவோமோ? என்கிற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து காரில் இருந்த எனது தந்தை உடல் மீது டீசலை ஊற்றி தீவைத்து எரித்து விட்டோம். பின்னர் நானும், எனது தாயும் வீட்டிற்கு நடந்தே வந்து விட்டோம். தற்போது போலீசின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நாங்கள் இருவரும் சிக்கி கொண்டோம்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலபதிபரை மனைவியும், மகனும் கொலை செய்து காரில் வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News