செய்திகள்
கைதான பிரபாகரன்

பெண் அதிகாரியை கன்னத்தில் அறைந்த போதை ஆட்டோ டிரைவர் ஜெயிலில் அடைப்பு

Published On 2019-11-07 11:53 GMT   |   Update On 2019-11-07 11:53 GMT
டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரியை, போதை வாலிபர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேச்சேரி:

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூரில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சுசீலா ராணி (வயது 53), மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் மாலினி, ஊராட்சி செயலர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் குட்டைமேடு பகுதியில் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுக்களை அழிக்கும் முறை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது கூனாண்டியூர், குட்டமேடு பகுதியை சேர்ந்த டிரைவர் பிரபாகரன் (32) என்பவர் தனது சரக்கு ஆட்டோ டெம்போ வாகனத்தில் அங்கு வந்தார். நேராக அவர், விழிப்புணர்வு குழுவினர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது தன் டெம்போ வாகனத்தை குறுக்காக நிறுத்தி கீழே இறங்கினார்.

போதையில் இருந்த அவர், திட்ட அலுவலர் சுசீலா ராணியிடம், ‘‘யாரை கேட்டு பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, இப்பணிகளை செய்கிறீர்கள்?’’ என கேள்வி எழுப்பினார்.

இதை சொல்ல நீ யார்? என உள்ளாட்சி அலுவலர்கள் கேட்டதற்கு, ‘‘நான், அரசுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரி கட்டுகிறேன். எனவே என்னிடம் நீங்கள் அனுமதி கேட்டு இருக்க வேண்டும். அனுமதி கேட்காமல் பள்ளி மாணவர்களை எப்படி விழிப்புணர்வு பிரசாரத்துக்கு அழைத்து வரலாம்?. மேலும், இங்கு பணி செய்ய வேண்டுமென்றாலும் என்னிடம் அனுமதி பெற வேண்டும்’’ என கூறி ரகளையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, அங்கிருந்த அலுவலர்களை தனது செல்போனில் பிரபாகரன் வீடியோ எடுத்தார். இதனால் சுசீலாராணி, அவரை தள்ளி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் ஆபாசவார்த்தைகளால் திட்டி, சுசீலாராணியை கன்னத்தில் அறைந்தார். இதில் நிலைகுலைந்து அவர் அழ தொடங்கினார்.

பின்னர், பிரபாகரன் தனது டெம்போ வாகனத்தை எடுத்து அலுவலர்கள் மீது மோத முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள், அங்கு கூடிய பொதுமக்கள் உடனடியாக மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், பிரபாகரனை பிடித்துச் சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து சுசீலாராணி கொடுத்த புகாரின் பேரில், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதல், வாகனத்தை கொண்டு ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பன உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்தனர். மேலும் அவரது சரக்கு ஆட்டோ டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரை மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
Tags:    

Similar News