செய்திகள்
கோப்பு படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை

Published On 2019-11-07 09:15 GMT   |   Update On 2019-11-07 09:15 GMT
அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில் பாதுகாப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் உட்கோட்டம் பகுதியான திருவள்ளூர், மணவாள நகர், மப்பேடு, புல்லரம்பாக்கம், வெள்ளவேடு, செவ்வாபேட்டை, கடம்பத்தூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெட்ரோல் பங்க் மற்றும் தங்கும் விடுதி நடத்துபவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் கூறியதாவது:-

விடுதியில் தங்குபவர்களில் சந்தேகப்படும் வகையில் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அறை ஒதுக்ககூடாது. இது தொடர்பான தகவலை உடனே அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.

விடுதிகளில் தங்குவோரின் முழு விவரங்களான ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்களை பெற வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி விடுதி அறையில் தங்க அனுமதித்தால் விடுதி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடுதிக்கும் ‘சீல்’ வைக்கப்படும்.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனத்தில் வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும், சில்லரையாக பாட்டில்களில் கொடுக்ககூடாது.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, தமிழ்வானன், கண்ணபிரான் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News