செய்திகள்
அரசு ஆஸ்பத்திரி முன்பு பனகல் சாலையில் பாலமுருகனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபர் மரணம்

Published On 2019-10-26 04:30 GMT   |   Update On 2019-10-26 04:30 GMT
மதுரையில் ஆள் கடத்தல் வழக்கில் கைதான வாலிபர் போலீஸ் தாக்கியதால் இறந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை:

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் பார்த்திபன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவரை ஒரு கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தியது.

கடத்தப்பட்ட பார்த்திபனை ரூ. 20 லட்சம் கொடுத்தால் உயிரோடு விடுவதாக ராஜூவுக்கு செல்போனில் மிரட்டல் வந்தது. இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய சோலையழகுபுரத்தைச் சேர்ந்த முத்துகருப்பன் மகன் பால முருகன் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அனுப்பானடி சரவணன், வில்லாபுரம் முருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பால முருகன் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்தார்.

பாலமுருகன் இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணைக்கு சென்ற பாலமுருகனை, போலீசார் தாக்கியதால் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பாலமுருகனின் தந்தை முத்து கருப்பன் கூறியதாவது:-

எனது மகன் பாலமுருகனை அவனியாபுரம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அவன் என்ன ஆனான்? என்று தெரியவில்லை. தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அவன் இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

விசாரணை என்ற பெயரில் எனது மகனை போலீசார் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த திடீர் போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இன்று பிரேத பரிசோதனை முடிந்து பாலமுருகனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News