செய்திகள்
சுஷ்மிதா

கர்ப்பிணி கொலையில் திடீர் திருப்பம்- ஓவர் ஆக்டிங்கால் சிக்கிய கணவர்

Published On 2019-10-24 10:28 GMT   |   Update On 2019-10-24 10:28 GMT
வேடசந்தூரில் கர்ப்பிணி பெண் கொலையில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலிக்காக கணவரே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
திண்டுக்கல்:

வேடசந்தூர் வசந்த் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). இவரது மனைவி சுஷ்மிதா (20). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 9 மாத கர்ப்பிணியாக இருந்த சுஷ்மிதா நேற்று கவுண்டச்சிபட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டின் அருகே வயலில் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகள், மாயமானதாலும், காயங்கள் இருந்ததாலும் நகைக்காக கொலை செய்திருக்கலாம் என போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார் புகார் அளித்தார்.

அதன் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுஷ்மிதா உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பமாக அவரது கணவரே கொலை செய்து நாடகமாடியது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தினேஷ்குமார் வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இதே மில்லில் சுஷ்மிதாவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்துக்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தனது மாமியார் வீட்டிலேயே மனைவியுடன் வசித்து வந்துள்ளார். மருமகனுக்காக அவரது மாமனார் கனகராஜ் டாடா ஏஸ் வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து மனைவியை நன்றாக கவனித்து வந்துள்ளார்.

ஆனால் வேடசந்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தினேஷ்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த விபரம் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் சுஷ்மிதாவுக்கு தெரிய வந்தது. இதனால் கணவரை அவர் கண்டித்தார்.

மேலும் அவரது செல்போனையும் வாங்கி யார்? யாருக்கு போன் செய்துள்ளார்? என அடிக்கடி சோதித்து வந்துள்ளார். இதனால் தனது கள்ளக்காதலியை பார்ப்பதை தவிர்த்து வந்தார். இருந்தபோதும் அவர் அடிக்கடி தினேஷ்குமாருக்கு போன் செய்து வந்துள்ளார். இந்நிலையில்தான் கள்ளக்காதலி அறிவுரையின் பேரில் தனது மனைவியை கொலை செய்ய தினேஷ்குமார் திட்டமிட்டார்.

வேலைக்கு செல்வது போல் சென்று விட்டு தனது மனைவியை மட்டும் தனியாக தோட்டத்துக்கு அழைத்து வந்தார். அங்கு அவரிடம் சுஷ்மிதா மீண்டும் கள்ளத்தொடர்பு குறித்து தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்துள்ளார். பின்னர் தன்னை காப்பாற்றிக் கொள்ள கழுத்தில் இருந்த நகைளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு சென்று விட்டார்.

பின்னர் தனது வீட்டுக்கு சென்று சுஷ்மிதா இங்கு வந்தாரா? என கேட்டுள்ளார். அவர் வரவில்லை என தெரிந்ததும் மீண்டும் தனது மாமியார் வீட்டுக்கு வந்து சுஷ்மிதா பற்றி விசாரித்தார். பின்னர் மாமியார், மாமனாருடன் சேர்ந்து தேடுவது போல் அங்கும் இங்கும் தேடிப்பார்த்துள்ளார். அப்போது வயலில் இறந்து கிடந்த தனது மனைவியை பார்த்து கதறி அழுதுள்ளார். அதன் பின் அவரே கூம்பூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மனைவியை யாரோ கொலை செய்து விட்டனர் என்று புகார் அளித்துள்ளார்.

கர்ப்பிணி சுஷ்மிதா இறந்தது குறித்து முதலில் புகார் வந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத தினேஷ்குமார் சுஷ்மிதாவை நகைக்காக கொலை செய்து விட்டனர் என கூறியுள்ளார்.

ஆனால் நகைக்காக கொலை நடந்திருந்தால் அவர் காதில் அணிந்திருந்த தோடு, கொலுசு, செல்போன் ஆகியவற்றை கொள்ளையன் விட்டு சென்றிருக்க வாய்ப்பு இல்லை. மேலும் கொலை நடந்த இடம் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு அந்நியர் யாரேனும் வந்தால் அது உடனடியாக தெரிந்து விடும்.

எனவே கணவரே தனது மனைவியை அழைத்து வந்து கொலை செய்து விட்டு விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே என் மனைவியை நகைக்காக கொலை செய்து விட்டனர் என வார்த்தைக்கு வார்த்தை போலீசில் கூறி வந்தார். இதனால் போலீசாருக்கு தினேஷ்குமார் மீது சந்தேகம் வலுத்தது. திண்டுக்கல்லுக்கு தினேஷ்குமாரை வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் தான் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். மேலும் அவரது கள்ளக்காதலியையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News