செய்திகள்
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது எடுத்த படம்.

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2019-10-23 03:55 GMT   |   Update On 2019-10-23 03:55 GMT
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 82 ஆயிரத்து 875 பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று இரவு 7.30 மணி அளவில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அங்கிருந்த ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

ஊராட்சி பகுதிகளில் வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக முறைகேடாக பணத்தை பெற்றுக்கொண்டு ஊராட்சி செயலாளர்கள் வந்தது தெரியவந்தது. இந்த சோதனை இரவு 11 மணி வரை முன்றரை மணி நேரம் நீடித்தது.

சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 82 ஆயிரத்து 875 பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி கூறும்போது, சோதனையின் போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த பொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் தமிழரசன் என்பவரிடம் இருந்து ரூ.51 ஆயிரமும் மற்ற ஊராட்சி செயலாளர்களிடம் இருந்து கணக்கில் இல்லாத பணம் என மொத்தம் ரூ.82 ஆயிரத்து 875 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவை ஊராட்சி பகுதிகளில் வீட்டுமனைக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக முறைகேடாக வசூலித்த பணம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அதன்பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த சோதனையால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News