செய்திகள்
முக்கடல் அணை நிரம்பிவழியும் காட்சி.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நிரம்பியது

Published On 2019-10-22 04:39 GMT   |   Update On 2019-10-22 04:39 GMT
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பெய்யத் தொடங்கிய மழையின் காரணமாக இன்று காலை முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

முக்கடல் அணையில் குழாய் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடுமையான வறட்சி ஏற்பட்டு அணை வறண்டது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாகர்கோவில் நகர மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பெய்யத் தொடங்கிய மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரத் தொடங்கியது. இந்த மாத தொடக்கத்தில் முக்கடல் அணையின் நீர்மட்டம் 14 அடியை எட்டியது.

இதையடுத்து மீண்டும் முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களாக அணையின் நீர்மட்டம் 14 அடியிலேயே இருந்து வந்தது.

நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக முக்கடல் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்தது. இதனால் அணை நீர்மட்டம் கிடு, கிடுவென உயரத்தொடங்கியது. கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது. இன்று காலை அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

அணை நிரம்பி வழிந்ததை அடுத்து நகராட்சி அதிகாரிகள் அணையை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News