செய்திகள்
மரணம்

கடையத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலி

Published On 2019-09-30 04:52 GMT   |   Update On 2019-09-30 05:10 GMT
கடையத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடையம்:

நெல்லை மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. பாவூர்சத்திரம் அருகே உள்ள ராமசந்திரபட்டினத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் டெங்கு காய்ச்சலால் நேற்றுமுன்தினம் பலியானார்.

இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவின் பேரில் சுகாதார துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் 2 பேருக்கும், நெல்லை மாநகராட்சி 41-வது வார்டு பகுதியில் ஒரு பெண்ணுக்கும் டெங்கு காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சங்கரன்கோவிலை சேர்ந்த மனிஷா, ஊத்துமலை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த சேர்மசெல்வி ஆகிய 2 பேரும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடையம் அருகே வெய்க்காலிப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த பரமசிவம் (60) மர்மகாய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஊர் திரும்பினார். இதையடுத்து சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் நேற்றிரவு உயிரிழந்தார். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News