செய்திகள்
கவுதமன்

விக்கிரவாண்டி தொகுதியில் டைரக்டர் கவுதமன் போட்டி

Published On 2019-09-26 09:32 GMT   |   Update On 2019-09-26 09:32 GMT
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக டைரக்டர் கவுதமன் அறிவித்துள்ளார்.
சென்னை:

டைரக்டர் கவுதமன், தமிழ் பேரரசு என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக களம் கண்டது என பல போராட்டங்களில் பங்கேற்றுள்ள கவுதமன், கிண்டி கத்திப்பாரா பாலத்தை திடீரென பூட்டு போட்டு பூட்டியும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழ்பேரரசு கட்சியை தொடங்கி, அதன் பொதுச்செயலாளரான பின்னர், தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை சந்தித்தும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக கவுதமன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

போர் வீரனாக இருந்தால் களத்தில் நிற்க வேண்டும். அப்போதுதான் வெற்றி- தோல்வியை உணர முடியும். இன்று தமிழ் இனம் பல்வேறு அத்துமீறல்களை சந்தித்து வருகிறது. நீட் தேர்வால் தம் பிள்ளைகள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

விவசாயிகளும், மீனவர்களும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்திகாரர்கள், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் குடியேறி வருகின்றனர். அவர்களை தமிழக அரசு வாழ வைக்கிறது. எதிர்க்கட்சி வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தின் உரிமைகளை பேச ஆள் இல்லை. இது போன்ற காரணங்களாலும் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளேன்.

ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டமாக இருந்தபோது, நானும் இந்த மண்ணின் மைந்தனாக இருந்துள்ளேன். அந்த வகையில், விக்கிரவாண்டி தொகுதி மக்கள், என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பணத்தால் வென்று விடலாம் என நினைக்கிறார்கள். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே நான் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகிறேன். நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News