செய்திகள்
ஹெல்மெட்

குமரியில் நாளை முதல் அமல்- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டினால் ரூ.1000 அபராதம்

Published On 2019-08-31 10:26 GMT   |   Update On 2019-08-31 10:26 GMT
குமரியில் நாளை முதல் புதிய வாகன விதிமுறை சட்டப்படி அபராதம் விதிக்கப்பட உள்ளது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் ரூ.1000 அபராதம் கட்ட வேண்டும்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் அதிரடியாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களில் பகல் நேரங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 3 நாட்களில் சுமார் 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டியதாக நேற்றும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டார், செட்டிக்குளம், ஒழுகினசேரி பகுதியில் இன்று காலையிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக ஏராளமான வாகன ஓட்டிகள் குறுக்கு சாலைகள் வழியாக புகுந்து சென்றனர்.

போலீசாரின் தொடர் சோதனை எதிரொலியால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

நித்திரவிளை சப்-இன்ஸ்பெக்டர் சோபன்ராஜ் மற்றும் போலீசார் நித்திரவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அந்த வாலிபர் வாகன சோதனையில் ஈடுபட்ட ஏட்டு ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினார்.

இது குறித்து ராஜ்குமார் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இறையுமன்துறையை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவரை கைது செய்தனர்.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் புதிய வாகன விதிமுறை சட்டப்படி அபராதம் விதிக்கப்பட உள்ளது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் ரூ.1000 அபராதம் கட்ட வேண்டும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.10 ஆயிரமும், சீட்பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1000-மும், அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரமும், லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும்.

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும், அதிக பயணிகளை ஏற்றிச் சென்றால் ரூ.1000-மும், தகுதி இல்லாத வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதமும் வசூலிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News