செய்திகள்
மேட்டூர் அணையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் தீவிர சோதனை செய்தனர்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு

Published On 2019-08-24 05:03 GMT   |   Update On 2019-08-24 05:03 GMT
பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:

பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் தற்போது கோவையில் பதுங்கி உள்ளதாகவும் மத்திய உளவுத்துறை 2 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது.

அதன்தொடர்ச்சியாக சேலத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய வாகன சோதனை நடந்தது. அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், கொலை, திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 416 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், 5-க்கும் மேற்பட்ட ரவுடிகளையும் கைது செய்தனர்.

மேலும் லாட்ஜ்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது தங்கி இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதே போல ரெயில்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.

2-வது நாளாக இன்றும் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கண்காணிப்பு மேலும் சில நாட்களுக்கு தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை மற்றும் அணையின் சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் நேற்று தீவிர சோதனை செய்தனர்.

மேலும் அணையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவத்தினர் 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட உஷார் படுத்தப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்தியபடி அவர்கள் அணையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணை பூங்காவிற்கு செல்வோர் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

பஸ், ரெயில் பயணிகளிடமும் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. சந்தேகத்திற்கு இடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்கள் பற்றிய விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
Tags:    

Similar News