செய்திகள்
ராஜ்குமார்

காரிமங்கலம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது

Published On 2019-08-22 14:50 GMT   |   Update On 2019-08-22 14:50 GMT
காரிமங்கலம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியமிட்டஅள்ளியை சேர்ந்தவர் ராமு (47). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 11-ம்தேதி இவரது மனைவி லதா, அவரது தாயாருடன் கோவைக்கு கண் சிகிச்சைக்கு சென்றுள்ளார். ராமு வியாபார விஷயமாக வெளியில் சென்றிருந்தார். அவரது மகன்கள் பரத், சியாம் ஆகியோர் கிரிக்கெட் விளையாட வீட்டை பூட்டைப்போட்டு வெளியே சென்றுள்ளனர்.

இந்நிலையில் பரத் வீட்டிற்கு திரும்பிவந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதும், பீரோ திறந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து தனதுதந்தை ராமுவிற்கு போன் செய்துள்ளார். பின்னர் அவர் வீட்டிற்குவந்து பார்த்த போது ரொக்கம் 15 லட்சமும், நகைகள் 48 பவுன் திருடு போனது தெரியவந்தது. 

இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் இளவரசன், விஜயசங்கர், அன்பழகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து திருடனை தேடி வந்தனர். 

இந்த நிலையில் கும்பாரஅள்ளி தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் ரோந்து சென்றபோது வாலிபர் ஒருவர் தனியாக மதுஅருந்திக் கொண்டிருந்ததை கண்டு அவரைபிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின்னாக அவர் பதில்அளித்தான். சிறுதுநேரத்தில் தப்பிஓட முயன்ற அவரை போலீசார் துரத்தி பிடித்தனர். பின்னர், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த கால்வேஅள்ளி (எ) காவாப்பட்டியை சேர்ந்தவர் ராமன்மகன் ராஜ்குமார் (26) என்பதும் தெரியவந்தது. அவர் அரிசி வியாபாரி ராமுவின் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். 

மேலும் கொள்ளையன் காரிமங்கலம் பைபாஸ் சாலையில் உள்ள ஒருவீடு மற்றும் தும்பலஅள்ளி வீட்டில் கொள்ளையடித்ததையும் தீவிர விசாரணையில் ஒப்புக் கொண்டார். 

பின்னர், போலீசார் அவரிடமிருந்து 38 பவுன் நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். ராஜ்குமாரை பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News