செய்திகள்
இப்ராகிம்ஷா அருகில் அவருக்கு உதவிய இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா

குற்றவாளி திருந்தி வாழ உதவிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்

Published On 2019-08-20 09:13 GMT   |   Update On 2019-08-20 09:13 GMT
மதுரையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி திருந்தி வாழ உதவிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை:

மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம்ஷா (வயது 54). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்தார். இதனால் போலீசார் அவரை அடிக்கடி கைது செய்வதும் பின்னர் ஜாமீனில் விடுவிப்பதும் தொடர் கதையாகி வந்தது.

இப்ராகிம்ஷா மீது திலகர் திடல், திடீர்நகர், ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்ராகிம்ஷா, திலகர் திடல் போலீஸ் நிலையப்பகுதியில் சுற்றித்திரிந்தார். இதை கவனித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா விசாரணை நடத்தினார்.

அப்போது, ஆதரவின்றி இருப்பதாகவும், ஏற்கனவே சிக்கிய வழக்குகளில் செலவுக்காக அடிக்கடி கஞ்சா விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஏதேனும் ஒரு வேலை செய்தாவது திருந்தி வாழ நினைக்கிறேன். ஆனால் யாருமே வேலை கொடுக்க மறுக்கிறார்கள் என தெரிவித்தார்.

ஏற்கனவே தான் உப்பு விற்கும் தொழில் செய்து வந்ததாகவும் இப்ராகிம்ஷா தெரிவித்தார்.



இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா, இப்ராகிம்ஷா திருந்தி வாழ ஏதுவாக அவர் மீண்டும் உப்பு வியாபாரம் செய்வதற்கு உதவுவதாக தெரிவித்தார். அதன்படி ரூ.7 ஆயிரம் மதிப்பில் புது சைக்கிள், உப்பு மூட்டையை இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் இப்ராகிம் ஷாவுக்கு வாங்கிக் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட அவர் தற்போது உற்சாகத்தோடு உப்பு வியாபாரம் செய்து வருகிறார்.

குற்றவாளி திருந்தி வாழ ஏதுவாக அவருக்கு உதவிய பெண் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலாவுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News