செய்திகள்
அப்பா தீவினை படத்தில் காணலாம்

கீழக்கரை பகுதியில் தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் - அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்

Published On 2019-08-20 03:56 GMT   |   Update On 2019-08-20 03:56 GMT
கீழக்கரை பகுதியில் உள்ள தீவுகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் உள்ள கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்கமாக திகழக்கூடிய மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 21 தீவுகள் அமைந்துள்ளன. தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியை உள்ளடக்கிய இந்த தீவுகளை சுற்றிலும் பவளப்பாறைகள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதியை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக மத்திய அரசு கடந்த 1989-ம் ஆண்டு அறிவித்தது. மேலும் இந்த பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. சர்வதேச கடல் வாழ் ஆராய்ச்சியாளர்கள் இந்த பகுதியை கொண்டாடுகிறார்கள். மேலும் இந்த தீவுகளை பாதுகாப்பதில் இங்குள்ள பவளப்பாறைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது பவளப்பாறைகள் கடல் வெப்பநிலை உயர்வு காரணமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போதைய நிலை தொடருமானால் எதிர்காலத்தில் 21 தீவுகளையும் இழக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை அருகே ½ எக்டேர் பரப்பளவு கொண்ட பூவரசன்பட்டி தீவு கடலுக்குள் பெரும்பாலும் மூழ்கியதால் இந்த தீவில் தென்னை, பனை, வேம்பு உள்ளிட்ட மரங்கள், செடிகள் அழிந்து விட்டன. இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் நிதிஉதவியுடன் தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் இங்கு கடல் பகுதியில் ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை சமப்பித்துள்ளனர்.

இதில் மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி குழுவில் உள்ள தீவுகள் கடந்த 50 ஆண்டுகளில் 71 சதவீதம் சுருங்கியுள்ளதாகவும், கீழக்கரை குழுவில் உள்ள தீவுகள் 43.49 சதவீதமும், வேம்பார் குழுவில் உள்ள தீவுகள் 36.21 சதவீதமும், மண்டபம் குழுவில் உள்ள தீவுகள் 21.84 சதவீதமும் நிலப்பரப்பில் குறைந்துள்ளன.

விதிவிலக்காக மண்டபம் குழுவில் உள்ள முயல் தீவு, மனோலி தீவு, சிங்கில் தீவு உள்ளிட்ட தீவுகளின் நிலப்பரப்பு மட்டும் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி குழுவில் உள்ள அனைத்து தீவுகள் மற்றும் கீழக்கரை குழுவில் உள்ள வாலிமுனை தீவு, முல்லி தீவு ஆகியவை கரையை நோக்கியும், மண்டபம் குழுவில் உள்ள முயல் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு ஆகியவை கடல் பகுதியை நோக்கியும் நகர்ந்து வருகின்றன. வேம்பார் குழுவில் உள்ள தீவுகளும், இதர தீவுகளும் தொடர்ந்து அதே நிலையில் உள்ளன. கடல் அரிப்பு தீவுகள் அழிவுக்கு முக்கிய காரணியாக திகழ்கிறது. கடல் அரிப்பு இதே நிலையில் இருந்தால் தூத்துக்குடி குழுவில் உள்ள காசுவார் மற்றும் காரைச்சல்லி தீவுகள் வருகிற 2036-ம் ஆண்டுக்குள் முழுமையாக கடலில் மூழ்கிவிடும்.

இதுபோல வேம்பார் குழுவில் உள்ள உப்புத்தண்ணி, புலுவினிச்சல்லி மற்றும் நல்ல தண்ணி ஆகிய தீவுகள் 2064 முதல் 2193-ம் ஆண்டுக்குள்ளும், கீழக்கரை குழுவில் உள்ள ஆனையப்பர், வல்லிமுனை, அப்பா, தலையாரி, வாழை மற்றும் முல்லி ஆகிய தீவுகள் 2032 முதல் 2180-ம் ஆண்டுக்குள்ளும், மண்டபம் குழுவில் உள்ள மனோலிபுட்டி, பூமரிச்சான், புள்ளிவாசல் ஆகிய தீவுகள் 2140 முதல் 2525-ம் ஆண்டுக்குள்ளும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் கடல் வாழ் ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கீழக்கரை வனத்துறை அதிகாரி சிக்கந்தர் பாட்ஷா கூறும்போது, பவளப்பாறைகளை பாதுகாப்பதுடன், அதனை வளர்ப்பது பற்றியும், அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பதுடன் மரங்கள் அதிகஅளவில் ஊன்றப்பட்டு வளர்த்து வருகிறோம் என்று கூறினார். இதேபோல மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் இதனை கருத்தில் கொண்டு பவளப்பாறைகளை சேதப்படுத்தாமல் தங்கள் தொழிலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News