செய்திகள்
இறந்த தந்தையின் உடல் முன்பு ஆசிரியர் அலெக்சாண்டர் தனது காதலி ஜெகதீஸ்வரியை திருமணம் செய்து கொண்டார்.

திண்டிவனம் அருகே இறந்த தந்தையின் உடல் முன்பு காதலியை திருமணம் செய்த ஆசிரியர்

Published On 2019-08-10 04:04 GMT   |   Update On 2019-08-10 04:04 GMT
தந்தை இறந்த பிறகும் அவரது உடலிடம் ஆசிர்வாதம் பெற்று காதலியை ஆசிரியர் திருமணம் செய்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.
மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி. இவருடைய மகன் அலெக்சாண்டர்(வயது 27). இவர் மயிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த மயிலம் அடுத்த குணமங்கலத்தை சேர்ந்த பாலசுந்தரம் மகள் ஜெகதீஸ்வரி (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இருவீட்டு பெற்றோரும் ஒன்றாக பேசி, அலெக்சாண்டருக்கும், ஜெகதீஸ்வரிக்கும் அடுத்த மாதம் 2-ந்தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்து வைப்பது என்றும், அன்றைய தினம் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து இருவீட்டாரும் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தெய்வமணி நேற்று திடீரென இறந்தார். அடுத்த மாதம் அலெக்சாண்டருக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் தெய்வமணி இறந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தந்தையின் மீது அதிக பாசம் கொண்ட அலெக்சாண்டர் தந்தை உடல் முன்பு தனது காதலியை திருமணம் செய்ய முடிவு செய்து உறவினர்களிடம் கூறினார்.

அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்பு அவர்கள் குணமங்கலத்தில் உள்ள ஜெகதீஸ்வரி மற்றும் அவரது பெற்றோரிடம் தெய்வமணி இறந்தது பற்றியும், அவரது உடல் முன்பு ஜெகதீஸ்வரியை அலெக்சாண்டர் திருமணம் செய்து கொள்ள விரும்புவது பற்றியும் கூறினர். இதற்கு ஜெகதீஸ்வரி குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜெகதீஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சிங்கனூருக்கு வந்தனர். பின்னர் தெய்வமணியின் கைகளில் தாலியை வைத்து ஆசிர்வாதம் பெற்ற அலெக்சாண்டர், ஜெகதீஸ்வரியின் கழுத்தில் கட்டினார்.

தாலி கட்டும்போது அலெக்சாண்டர் கதறி அழுதார். அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்களும் அழுதனர். தந்தை இறந்த பிறகும் அவரது உடலிடம் ஆசிர்வாதம் பெற்று காதலியை ஆசிரியர் திருமணம் செய்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.
Tags:    

Similar News