செய்திகள்
செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பி வழியும் காட்சி.

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை - சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்வு

Published On 2019-08-08 06:40 GMT   |   Update On 2019-08-08 06:40 GMT
நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்து 108.59 அடியாக உள்ளது.
நெல்லை:

தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதாலும் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை கொட்டியது. நகர்புறங்களில் சாரல் மழை இடைவிடாது பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 110 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

அதேபோல் கொடு முடியாறு அணை பகுதியில் 75 மில்லி மீட்டரும், கடற்கரை பகுதியான ராதாபுரம் பகுதியில் 66.2 மில்லிமீட்டரும், அடவி நயினார் அணை பகுதியில் 55 மில்லி மீட்டரும், குண்டாறு அணைப்பகுதியில் 51 மில்லிமீட்டரும், செங்கோட்டை நகர் பகுதியில் 39 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலங்களில் தான் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும். ஆனால் தற்போது நெல்லை, பாளை, சங்கரன்கோவில், வள்ளியூர், ராதாபுரம் உள்பட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பெய்த அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சேர்வலாறு-47, அம்பை -37.6, நாங்குநேரி-28.2, கருப்பாநதி-28, மணிமுத்தாறு-22.4, கடனாநதி-20, ராமநதி-20, நம்பியாறு-20, கன்னடியன் கால்வாய்-19.6, தென்காசி -18.3, களக்காடு-15.4, மூலக்கரைப்பட்டி-13, சேரன்மகாதேவி-9, பாளையங்கோட்டை-3.4, ஆய்க்குடி-2.8, நெல்லை-1.5.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 882 கனஅடி தண்ணீர் சீறி பாய்ந்து வருகிறது. இதனால் நேற்று 65.90 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து இன்று காலை 77.50 அடியானது.

அதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 80.64 அடியாக இருந்தது. இன்று 28 அடி உயர்ந்து 108.59 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1958 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 54 அடியாக உள்ளது.

கடனாநதி அணைக்கு வினாடிக்கு 776 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 46.60 அடியாக இருந்த அந்த அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 53 அடியாக உயர்ந்தது. ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்று 60.25 அடியாக இருந்தது. அங்கு 5 அடி உயர்ந்து இன்று 65.50 அடியாக உள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் நேற்று 40.03 அடியாக இருந்தது. அது 5 அடி உயர்ந்து 45.93 அடியாக அதிகரித்தது.

குண்டாறு அணை நேற்று 32 அடியாக இருந்தது. இன்று அணை முழு கொள்ளளவான 36.10 அடியாக உயர்ந்து நிரம்பி வழிகிறது. ஒரே நாளில் குண்டாறு அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 89 அடியாக உயர்ந்தது.

களக்காடு அருகே உள்ள கொடுமுடியாறு அணைக்கு வினாடிக்கு 512 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 29 அடியாக இருந்தது. ஒரே நாளில் 57 அடி உயர்ந்து இன்று காலை 86.45 அடியாக உள்ளது. நம்பியாறு, வடக்கு பச்சையாறு அணைகளுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயரவில்லை.

வழக்கமாக பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணை தண்ணீர் ஜூலை மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் மிகவும் குறைவாக இருந்ததால் அணை திறக்கப்படவில்லை. தற்போது பாபநாசம் அணை நீர்மட்டம் 77.50 அடியாக உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டினால் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News