செய்திகள்
இளம்பெண் கடத்தல்

செங்குன்றம் அருகே இளம்பெண்ணை கத்திமுனையில் கடத்திய கொள்ளையர்கள்

Published On 2019-08-02 06:47 GMT   |   Update On 2019-08-02 06:47 GMT
செங்குன்றம் அருகே இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திய கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:

செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் அன்னை இந்திரா நினைவு நகரை சேர்ந்தவர் சகாயமேரி.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

செங்குன்றம் திருவள்ளூர் சாலையில் பழைய விமான தளம் அருகே ஆட்டோவில் வந்து இறங்கிய அவர் சுடுகாடு அருகே இருட்டான பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் வழிமறித்தது. திடீரென அவர்கள் சகாயமேரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். அவரது செல்போன் மற்றும் ரொக்கப் பணத்தை பறித்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் அதிர்ச்சி அடைந்த சகாய மேரி கூச்சல் போட்டார்.

இதனால் பயந்துபோன கொள்ளையர்கள், சகாய மேரியின் வாயை பொத்தி கத்திமுனையில் கடத்தினர். 2 பேர் வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் நடுவில் சகாய மேரியை அமரவைத்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

முன்னதாக இந்த கும்பல் அதேபகுதியில் குணா என்ற வாலிபரை தாக்கி செல்போனை பறித்துள்ளது. அவர் சகாயமேரி கடத்திச் செல்வதை பார்த்தார். உடனே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

சோழவரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான போலீசார் சகாய மேரியை மீட்க களம் இறங்கினர்.

இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, குமணன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.

இதற்கிடையே சகாய மேரி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. பொதுமக்களும் திரண்டனர்.

இதனால் கடத்தல் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இதற்கிடையே வழிப்பறி கொள்ளையர்கள் சுமார் 3 கி.மீ தூரத்துக்கு சகாயமேரியை கடத்திச் சென்றுவிட்டனர்.

போலீசார் தேடுவதை அறிந்ததும் மீஞ்சூர்- வண்டலூர் புறவழிச்சாலை அருகே சகாயமேரியை இறக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

சகாயமேரி வேறு ஒருவரின் செல்போனை வாங்கி உறவினருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று சகாய மேரியை மீட்டனர்.

கடத்தல் சம்பவத்தால் செங்குன்றம் பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பு நிலவியது. கடத்தலில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
Tags:    

Similar News