செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சசிகலா சிறையில் இருந்து வந்தால் மகிழ்ச்சிதான்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2019-07-22 05:06 GMT   |   Update On 2019-07-22 05:06 GMT
சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியில் கொண்டு வந்தால் மகிழ்ச்சிதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சிவகாசி:

சிவகாசியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் தொகுதி தி.மு.க.வின் கோட்டை என்பது போன மாசம். இப்போது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக உள்ளது. தி.மு.க.வின் கோட்டை இப்போது ஓட்டையாகி விட்டது. வேலூரில் தி.மு.க.விற்கு சரியான அடி கொடுப்போம். வேலூரில் அ.தி.மு.க.விற்கான வெற்றி வாய்ப்பு வலுவாக உள்ளது. இனிமேல் தி.மு.க. தேர்தலில் போட்டியிட தயங்கும் அளவிற்கு வேலூர் தேர்தல் முடிவு இருக்கும்.

தி.மு.க.வின் கன்ட்ரோல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் கையில்தான் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் பாடச் சொன்னால் மு.க.ஸ்டாலின் பாடுவார், ஆடச்சொன்னால் ஆடுவார்.

தற்போது ஸ்டாலின் கையில் தி.மு.க. இல்லை. தி.மு.க. தொண்டர்கள் இதை வெளியே சொல்ல முடியாமல் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

டி.டி.வி தினகரன் சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியில் கொண்டு வந்தால் அது மகிழ்ச்சிதான். சசிகலா சிறையிலிருந்து வெளிவந்தாலும் ஆட்சியில் எந்த மாற்றமும் இருக்காது ஏமாற்றமே இருக்கும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எதிரிகள் அவரது நிழலைக்கூட அணுக முடியாது. தேசிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா மட்டுமல்ல யார் சொன்னாலும் அதை முதல்வர் ஏற்றுக்கொள்வார்.

தி.மு.க.வின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் புரோட்டாவிற்கு மாவு தேய்த்துக்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் 8 வழிச்சாலை வேண்டாம் எனக்கூறி போராட்டம் நடத்திய தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் 8 வழிச்சாலை வேண்டும் என கூறுகிறார்.

நாங்கள் நினைத்தால் தி.மு.க. கட்சியே இல்லாமல் போய்விடும். நாட்டின் பிரதமரை முன்மொழியக் கூடிய இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அ.தி.மு.க. வையும் அ.தி.மு.க.வின் ஆட்சியையும் சீண்டிப் பார்க்க நினைத்தால் தி.மு.க. கட்சியை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News