செய்திகள்
தண்டவாளம்

தண்டவாளத்தில் இரும்பு கம்பி - ரெயிலை கவிழ்க்க சதியா?

Published On 2019-07-17 08:07 GMT   |   Update On 2019-07-17 08:07 GMT
இரணியல் அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி எரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் எண்ணத்தில் போடப்பட்டதா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் பல ரெயில்கள் திருவனந்தபுரம் சென்று வருகிறது.

இது போல திருவனந்தபுரத்தில் இருந்தும் பல ரெயில்கள் நாகர்கோவில் வருகின்றன. நேற்று இரவு 10 மணி அளவில் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வரும் எரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது இரணியல் அருகே கண்டன்விளை பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி ஒன்று கிடப்பதாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த அதிகாரிகள் உடனே கண்டன்விளை பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு தண்டவாளத்தை ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளத்தின் ஒரு பகுதியில் பெரிய இரும்பு கம்பி கிடப்பதை கண்டனர்.

உடனே அந்த கம்பியை அகற்றிய அதிகாரிகள் இது பற்றிய தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். கம்பி அகற்றப்பட்ட பின்னர் எரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக சென்றது.

கண்டன்விளை பகுதியில் இரவு நேரத்தில் ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பியை போட்டு சென்றது ஏன்? என்பது பற்றி ரெயில்வே அதிகாரிகள் அதிரடி விசாரணையில் இறங்கினர்.



எரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் எண்ணத்தில் இரும்பு கம்பி தண்டவாளத்தில் போடப்பட்டதா? என்றும் விசாரணை நடந்தது.

அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வந்த தொழிலாளிகள் இரும்பு கம்பியை தண்டவாள பகுதியில் விட்டு சென்றது தெரியவந்தது. அவர்கள் வேண்டுமென்றே கம்பியை போட்டு சென்றார்களா? அல்லது தவறுதலாக விட்டு சென்றார்களா? என்பது பற்றியும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரணியல் பகுதியில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ரெயில்வே அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News