செய்திகள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தஞ்சை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் மறியல்

Published On 2019-07-08 04:45 GMT   |   Update On 2019-07-08 04:45 GMT
தஞ்சை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து இன்று காலை கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கொண்டு வந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை ஏற்படும் என்று போராடி வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் மனித சங்கிலி போராட்டம், சாலை மறியல், வயலில் கருப்பு கொடிகளுடன் இறங்கி போராட்டம் என கிராம மக்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தஞ்சை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து இன்று காலை கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை அருகே நல்ல வன்னியன் குடிக்காடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தஞ்சை- நாகை சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும். காவிரி படுகை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், சட்டசபை கூட்டத்தொடரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாணவர்கள் கோ‌ஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக தஞ்சை-நாகை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News