செய்திகள்

திருவல்லிக்கேணி லாட்ஜில் மனைவி- கள்ளக்காதலியுடன் வி‌ஷம் குடித்த வாலிபர் பலி

Published On 2019-06-10 05:38 GMT   |   Update On 2019-06-10 09:43 GMT
சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் மனைவி மற்றும் கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மாங்கரையைச் சேர்ந்தவர் ஜெயன் (வயது 30). இவரது மனைவி புனிதா ராணி (29). இந்த தம்பதியின் குழந்தை ஜெசிபி (6).

ஜெயனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா (21) என்ற இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சரண்யாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய வந்ததும் ஜெயனின் மனைவி மற்றும் உறவினர்கள் அவர்களை கண்டித்தனர்.

இதனால் ஜெயனும், சரண்யாவும் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகும் ஜெயன்- சரண்யாவின் கள்ளத்தொடர்பு நீடித்தது. அவர்கள் மீண்டும் 2-வது முறையாக ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். அப்போதும் போலீசார் அவர்களை மீட்டு அறிவுரை கூறினர். சரண்யாவிடம் இருந்து தன்னை பிரித்தால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என ஜெயன் போலீசாரிடம் மிரட்டினார். போலீசார் எச்சரித்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

சொந்த ஊரில் வசித்தால் தங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று கருதிய ஜெயன் மனைவி புனிதா ராணி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியூர் செல்ல முடிவு செய்தார். அப்போது கள்ளக்காதலி சரண்யாவையும் தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஜெயன் பிடிவாதமாக கூறினார்.

முதலில் அவரது மனைவி மறுப்பு தெரிவித்தார். ஆனால் கணவர் மிரட்டியதால் வேறு வழியின்றி அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஜெயன், மனைவி புனிதா ராணி, கள்ளக்காதலி சரண்யா மற்றும் குழந்தை ஆகிய 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருங்கல்லில் இருந்து சென்னைக்கு வந்தனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் கடந்த 7-ந்தேதி அறை எடுத்து தங்கியிருந்தனர். நேற்று இரவு லாட்ஜ் ஊழியர்கள் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் அழைத்தபோதும் யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு ஜெயன் உள்பட 4 பேரும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

போலீசார் விரைந்து சென்று ஜெயன், புனிதா ராணி, சரண்யா ஆகிய 3 பேரையும் ராஜூவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தை ஜெசிபியை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஜெயன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News