செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் தினமும் 1 லட்சம் பேர் பயணம்

Published On 2019-05-11 06:45 GMT   |   Update On 2019-05-11 06:45 GMT
சென்னை மெட்ரோ ரெயிலில் தினமும் 1 லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். #MetroTrain
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் கோயம்பேடு- ஆலந்தூர் வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருமங்கலம் - சென்ட்ரல்- வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல்-சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயில் சேவைக்கு பயணிகள், பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோடை விடுமுறையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய கூட்டம் அலைமோதுகிறது. ‘மே’ மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினமும் 1 லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள்.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோடை விடுமுறை சீசனையொட்டி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ள பொது மக்கள், சிறுவர்கள் மெட்ரோ ரெயிலில் ஆர்வத்துடன் பயணம்செய்து வருகிறார்கள்.

ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட மெட்ரோ ரெயில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் தினமும் 1 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
Tags:    

Similar News