செய்திகள்
கோப்புப்படம்

மெட்ரோ ரெயில் வழித்தடம் மாற்றம்- பனகல் பூங்கா, நடேசன் பூங்காவுக்கு பாதிப்பு வராது

Published On 2019-05-07 09:46 GMT   |   Update On 2019-05-07 09:46 GMT
தி.நகர் பனகல் பூங்கா, நடேசன் பூங்காவுக்கு பாதிப்பு வராத வகையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

முதற்கட்டமாக வண்ணாரப்பேட்டை - விமான நிலையத்தில் 2 வழித்தட பாதைகளில் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லிக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பாதை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கலங்கரை விளக்கம் - பூந்தமல்லிக்கு தி-நகர் வழியாக சுரங்க மெட்ரோ ரெயில் வழித்தட பாதை அமைக்கப்பட உள்ளது.

தி-நகர் நடேசன் பூங்கா, பனகல் பூங்காவில் மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பூங்காக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்கள் குடியிருப்பு வாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தி-நகர் மெட்ரோ ரெயில் வழித்தட பாதையில் தி-நகரில் உள்ள நடேசன் பனகல் பூங்காக்களுக்கு எந்த வித பாதிப்பும் வராத வகையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் வழித்தட பாதையை மாற்றி அமைத்துள்ளது.

இதனால் தி-நகர் பனகல் பூங்கா, நடேசன் பூங்காவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. புதிய வழித்தட பாதையால் பூங்காவில் உள்ள மரங்கள் ஏதும் வெட்டப்படமாட்டாது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பூங்காக்களின் அருகில் உள்ள சாலையோர பகுதியில் மெட்ரோ ரெயில் நுழைவு பாதைகள் அமைக்கப்பட உள்ளது.

பனகல், நடேசன் பூங்காக்களில் சிறிது இடம் மட்டுமே மெட்ரோ ரெயில் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் பூங்காவுக்கு வரும் பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற உள்ளது.

2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணியால் சாலையோரம் உள்ள 2 ஆயிரம் மரங்கள் அகற்றப்படுகின்றன. மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்ததும் மரங்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் புதிய மரங்கள் நட மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. #MetroTrain
Tags:    

Similar News