செய்திகள்
விபத்தில் சிக்கிய வேன்-பஸ்சின் முன்பகுதி சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

மயிலம் அருகே விபத்து: அரசு பஸ்-வேன் மோதி 4 பேர் பலி

Published On 2019-02-16 10:07 GMT   |   Update On 2019-02-16 10:07 GMT
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை அரசு பஸ்- வேன் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மயிலம்:

சிவகங்கை மாவட்டம் எஸ்.காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் அங்குசாமி (வயது 50). இவர் தனது குடும்பத்தினருடன் சிவகங்கையில் இருந்து தனக்கு சொந்தமான வேனில் சென்னை நோக்கி புறப்பட்டார். அந்த வேனை அங்குசாமி ஓட்டினார்.

இந்த வேனில் அங்குசாமியின் மனைவி லட்சுமி (48), அவரது உறவினர் சிவகங்கை அருகே உள்ள கட்டான்குளத்தை சேர்ந்த உமாபதி (35), உமாபதியின் மனைவி விஜி (28) மற்றும் பலர் இருந்தனர்.

இவர்கள் வந்த வேன் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள விலங்கம்பாடி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

அதேபோல் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு விரைவு பஸ் ஒன்று திருச்சி நோக்கி சென்றது. அந்த பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் வக்கிரபட்டியை சேர்ந்த அருணானந்தன் என்பவர் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவராக குப்பத்துபட்டியை சேர்ந்த பிரபு (37) என்பவரும் இருந்தார்.

அந்த பஸ் மயிலம் அருகே உள்ள விலங்கம்பாடி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது விலங்கம்பாடி என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது அரசு பஸ் டிரைவர் எதிர்பாராதவிதமாக மறுபுறம் உள்ள சாலைக்கு பஸ்சை திருப்பினார்.

சிறிது தூரம் பஸ் சென்றது. அப்போது அந்த பஸ் மாற்றுச்சாலையில் செல்வதை உணர்ந்த அரசு பஸ் டிரைவர் என்ன செய்வது என்று தெரியாமல் பஸ்சை அங்கேயே நிறுத்தினார்.

அப்போது அந்த சாலையில் அங்குசாமி குடும்பத்தினர் வேன் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. விபத்தில் வேனில் பயணம் செய்த அங்குசாமி, அவரது மனைவி லட்சுமி, உறவினர் உமாபதி, உமாபதியின் மனைவி விஜி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் வேனில் பயணம் செய்த விக்னேஷ்வரன் (31), ரேகா (28), 1½ வயது குழந்தை நித்திஷ், பவித்ரன் (4), அரசு பஸ்சில் பயணம் செய்த டிரைவர்கள் அருணானந்தன், பிரபு, சென்னை சோளிங்கநல்லூரை சேர்ந்த குமரவேல், கரூரை சேர்ந்த நவீன் (25) உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலம் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 24 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News