செய்திகள்

மாதவரம் மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில் நோய் அறிதல் ஆய்வக கட்டிடம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2018-12-12 10:51 GMT   |   Update On 2018-12-12 10:51 GMT
மாதவரம் மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில் நோய் அறிதல் ஆய்வக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #Edappadipalaniswami

சென்னை:

சென்னை, மாதவரம் மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோய் அறிதல் ஆய்வகக் கட்டடம் மற்றும் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோய் கண்காணிப்பு ஆய்வகக் கட்டடம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் நோய் கண்காணிப்பு ஆய்வகக் கட்டடம், 1 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால்வளத்துறை துணை பதிவாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் அதிநவீன ஆவின் பாலகம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மாதவரத்தில் கட்டப்பட்டுள்ள நோய் அறிதல் ஆய்வகத்தில், மீன்களின் நோய்களை துல்லியமாகவும், துரிதமாகவும் கண்டறிவதற்கான ஆராய்ச்சி உபகரணங்கள் போன்ற வசதிகள், மீன் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றிய தகவல்களை தொழில்நுட்ப அறிவியல் அடிப்படையில் சேகரித்து ஆரம்ப காலத்திலேயே மீன்களுக்கு ஏற்படும் நோய்களை தடுத்து அதன் உற்பத்தியைப் பெருக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நோய் கண்காணிப்பு ஆய்வகத்தில், நீர் மற்றும் மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் தரத்தினை அறிவதற்கான உபகரண வசதிகள், மீன்களின் நோய்களை துல்லியமாகவும், துரிதமாகவும் கண்டறிவதற்கான ஆராய்ச்சி உபகரண வசதிகள், மீன் மற்றும் இறால் வளர்ப்போர் பண்ணைகளில் நோயறி சேவைகள், நீர் மற்றும் குளத்தடி மண் பரிசோதனை சேவைகள் போன்றவை மேற்கொள்ளப்படும்.

மேலும், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோய் கண்காணிப்பு ஆய்வகக் கட்டடம்; திருவள்ளூரில் 3757 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், 68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை பதிவாளர் (பால் வளம்) அலுவலகக் கட்டடம் மற்றும் சென்னை, நுங்கம்பாக்கத்தில் 53 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகம்; என மொத்தம் 4 கோடியே 46 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோய் அறிதல் மற்றும் நோய் கண்காணிப்பு ஆய்வகக் கட்டடங்கள், பால்வளத் துறை துணை பதிவாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் அதிநவீன ஆவின் பாலகம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Tags:    

Similar News