செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மரணம்- கைதான வாலிபரிடம் விடிய, விடிய விசாரணை

Published On 2018-11-12 10:17 GMT   |   Update On 2018-11-12 10:17 GMT
பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த சம்பவத்தில் கைதான வாலிபரிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினர். #dharmapurigirlstudent #girlmolested

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் 3 நாட்களுக்கு பிறகு இறந்து போனார்.

இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தனமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களை தப்பவிட்டதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் மாணவி கற்பழிக்கப்பட்டதை வெளியில் சொல்லக்கூடாது என்று அந்த மாணவியின் பெற்றோரை போலீசார் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

போலீசாரை கண்டித்து சிட்லிங் கிராம மக்கள் கடந்த 2 நாட்களாக மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக 24 கிராம மக்கள் திரண்டனர். இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. மாணவியின் பிணத்தையும் வாங்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.

தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி சிட்லிங் மலை கிராமத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடன்பாடு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் களை 48 மணி நேரத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதேபோல சிட்லிங் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும், வெளிமாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும். வெளிமாவட்ட டாக்டர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் மலைவாழ் மக்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் தண்டர்சீப் என்பவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் பா.ம.க. தரப்பில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர்கள் செல்வகுமார், பராசக்தி ஆகியோர் பிரேத பரிசோதனைக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் நேற்று மாலையும், இன்று காலையும் மாணவியின் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.

பா.ம.க.வினர் குறிப்பிட்ட சென்னை டாக்டர் செல்வகுமார் தற்போது மாநாட்டிற்காக வெளியூர் சென்று உள்ளார். அவர் நாளை தான் ஊருக்கு திரும்புவார். அவர் வந்த பிறகுதான் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று தெரிகிறது. என்றாலும் இன்றே பிரேத பரிசோதனை நடத்தி மாணவியின் உடலை ஒப்படைத்து பதட்டத்தை தணிக்க வேண்டும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படுமா என்பது தெரியவில்லை.

மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்ட சிட்லிங் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஏற்காட்டில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினார்கள். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் தலைமறைவாக உள்ள ரமேஷ் (22) என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

தருமபுரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் சிட்லிங் கிராமத்தில் இன்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். #dharmapurigirlstudent #girlmolested

Tags:    

Similar News