செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் கனமழை: அரசு பஸ் பணிமனைக்குள் தண்ணீர் புகுந்தது

Published On 2018-10-21 04:49 GMT   |   Update On 2018-10-21 04:49 GMT
விருதுநகர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அரசு பஸ் பணிமனைக்குள் தண்ணீர் புகுந்தது. #Rain

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 35.3 சென்டிமீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. சராசரி அளவு 29.45.

இரவு 10 மணிவரை பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

விருதுநகர் பழைய பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரின் தாழ்வான பகுதிகளான லட்சுமிநகர், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.

விருதுநகர் - மதுரை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த பஸ்களின் படிக்கட்டுகள் வரை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இன்று காலை பஸ்களை எடுக்க முடியவில்லை.

அதிகாலை 4 மணி முதல் தொடங்கும் பஸ் போக்குவரத்து இன்று காலை 7.30 மணிக்கே பணிமனையில் இருந்து தொடங்கியது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

விருதுநகர் சீனியாபுரம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் கவுசிகாமநதியில் கலந்து வெள்ளப்பெருக்காக காணப்பட்டது. இதனால் கரையோர குடியிருப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ராஜபாளையம் நகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. மலைப்பகுதியில் உள்ள அய்யனார் கோவில் ஆறு, முள்ளியாறு, பேயனாறு போன்றவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரியகுளம் கண்மாய், அலப்பச்சேரி கண்மாய், கருங்குளம், கொல்லங்கொண்டான் கண்மாய், பெரிய கண்மாய் உள்பட 108 கண்மாய்களும் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது.

ராஜபாளையம் நகராட் சிக்குட்பட்ட 6-வது மைல் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தேக்க ஏரிகள் மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வருகின்றன. #Rain

Tags:    

Similar News