செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி

Published On 2018-10-19 21:40 GMT   |   Update On 2018-10-19 21:40 GMT
கபிஸ்தலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கபிஸ்தலம்:

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர்கள் சஞ்சய் (வயது 14), மணிகண்டன் (17), வெங்கடேசன் (18). இதில் மணிகண்டனும், வெங்கடேசனும் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர்.

அதே ஊரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விஷ்ணுவர்தன் (13), 10-ம் வகுப்பு மாணவன் சிவபாலன் (15), 9-ம் வகுப்பு மாணவன் நவீன் (14), பிளஸ்-2 மாணவன் கதிரவன் (17). இவர்கள் 7 பேரும் நண்பர்கள்.

நேற்று மதியம் 7 பேரும் கபிஸ்தலம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றின் கரையில் முனியாண்டவர் கோவில் அருகே உள்ள ஒரு படித்துறையில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர். ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் எதிர்பாராதவிதமாக 7 பேரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

இதில் சஞ்சய் மட்டும் தண்ணீரில் தத்தளித்தபடி கரையேறினார். மற்ற அனைவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சஞ்சய் கதறி அழுதபடியே வீட்டிற்கு வந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி நீரில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டனின் உடல் அங்கிருந்த மதகு அருகில் நாணல்களுக்கு இடையே சிக்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அவருடைய உடலை மீட்டனர். மேலும் அதன் அருகே இருந்த வெங்கடேசன், விஷ்ணுவர்தன் ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டன. ராமானுஜபுரம் தடுப்பணைக்கு முன்பு நவீன் உடல் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவபாலன், கதிரவன் ஆகிய 2 பேர் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.

அவர்களை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #tamilnews
Tags:    

Similar News