செய்திகள்

பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2018-10-04 08:04 GMT   |   Update On 2018-10-04 08:04 GMT
பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #EdappadiPalaniswami #Rain #PrecautionsForMonsoon
மதுரை:

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



கூட்டம் முடிந்ததும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை அதிமுக தொடங்கி உள்ளது. மதுரை மாவட்டம் அதிமுகவுக்கு ராசியான மாவட்டம். இங்கு தொட்டது துலங்கும். ஆர்.கே.நகர் போன்ற நிலை திருப்பரங்குன்றத்தில் நடக்காது. தற்போதைய நிலையில் நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை. தனியாக இருக்கிறோம். தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியும்’ என்றார்.

பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம், மழை முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரசியல் குறித்த கேள்விகளுக்கும் முதல்வர் பதில் அளித்தார்.

‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க பிரதமரை சந்திக்க உள்ளேன். பருவமழை முன்னெச்சரிக்கைப் பொருத்தவரை 3 முறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டு, தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; கருத்து தெரிவிக்கலாம்’ என்றார் முதல்வர்.

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினருக்கு முதல்வர் ஆலோசனை வழங்கியதாகவும், தேர்தல் எப்போது வந்தாலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #EdappadiPalaniswami #Rain #PrecautionsForMonsoon

Tags:    

Similar News