செய்திகள்

முன்னாள் அமைச்சர் மகன் கடத்தியதாக கூறப்பட்ட தஞ்சை இளம்பெண் கோர்ட்டில் ஆஜர்

Published On 2018-09-24 16:08 GMT   |   Update On 2018-09-24 16:08 GMT
முன்னாள் அமைச்சர் மகன் கடத்தியதாக கூறப்பட்ட இளம்பெண் தஞ்சை கோர்ட்டில் ஆஜரானார். என்னை யாரும் கடத்தவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.

தஞ்சாவூர்:

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன். விஜய்ராஜேஸ் குமார் (வயது 35). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யாழினி (30). இவர் தஞ்சையை சேர்ந்தவர். இந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்ராஜேஸ் தரப்பில் இருந்து தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் ஒரு மனு கொடுத்தனர். அதில் யாழினியை நாகை அக்கரை பேட்டையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயபால் மகன் ரித்தீஷ் (30) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்பட்டிருந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை தஞ்சை ஜே.எம்.(எண் 1) - கோர்ட்டில் யாழினி ஆஜரானார். கடத்தப்பட்டதாக கூறிய யாழினி கோர்ட்டில் ஆஜரான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி இந்த வழக்கு குறித்து இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த யாழினி நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரித்தீஷ் என்பவர் என்னை கடத்தி விட்டதாக எனது கணவர் விஜய் ராஜேஸ் குமார் தரப்பில் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த புகார் முற்றிலும் தவறானது. என்னை யாரும் கடத்தவில்லை. நான் எப்போதும் போன்று சென்னையில் உள்ள கல்லூரிக்கு சென்று வருகிறேன். தேவைப்பட்டால் கல்லூரிக்கு தினமும் சென்று வந்த வருகை பதிவேட்டை பார்த்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News