செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது - 3 நாட்களில் அருவிகளில் பயணிகள் குளிக்க அனுமதி

Published On 2018-09-19 06:10 GMT   |   Update On 2018-09-19 06:10 GMT
ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து குறைந்து 8 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. மெயின் அருவியில் 3 நாட்களுக்குள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:

ஒகேனக்கல்லுக்கு நேற்று 9 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து குறைந்து 8 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. வழக்கம்போல சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோரம் குளித்து விட்டு செல்கிறார்கள்.

மெயின் அருவியில் வெள்ளத்தின்போது ஏற்பட்ட சேதத்தால் பழுதடைந்த கம்பிகளை அகற்றிவிட்டு புதிய தடுப்பு கம்பிகளை அமைத்து உள்ளனர். இந்த கம்பிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை பென்னாகரம் வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இன்னும் 2 நாட்களில் இந்த பணி முடிவடையும். அதன் பிறகு மெயின் அருவிக்கு வரும் தண்ணீரை வேறு வழியாக திருப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் அகற்றப்படும். அதன் பிறகு மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். 3 நாட்களுக்குள் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மீன் மார்க்கெட் அருகே உள்ள கோத்திக்கல் பாறையில் இருந்து பயணிகளை பரிசலில் ஏற்றி செல்லும் பரிசல் தொழிலாளர்கள் கூட்டாறு, ஐந்தருவி வழியாக மெயின் அருவிக்கு பயணிகளை சுற்றி காண்பிக்கிறார்கள்.

மேலும் கர்நாடகத்தில் இருந்து வந்த தண்ணீரில் தற்போது மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்த மீன்களை மீன்பிடி தொழிலாளர்கள் பிடித்து சமையல் தொழிலாளர்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு வறுத்து கொடுக்கிறார்கள். இந்த மீன்கள் சுவையுடன் இருப்பதாக சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்தார். #Hogenakkal #Cauvery

Tags:    

Similar News