செய்திகள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் மெக்கானிக் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-08-27 07:24 GMT   |   Update On 2018-08-27 07:24 GMT
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மெக்கானிக் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளித்தனர்.

குறைதீர்வு கூட்டம் நடந்தபோது வாலிபர் ஒருவர் மனைவி மற்றும் மகள், மகனுடன் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்
மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து மண்ணெண்ணை கேனை கைப்பற்றினர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.

அதில் தீக்குளிக்க முயன்ற வாலிபர், செங்கம் மேல்புதூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு (வயது 30) என்பது தெரிய வந்தது. போலீசாரிடம் சேட்டு கூறியதாவது:-

நான் மெக்கானிக் வேலை செய்து வருகிறேன். என் மனைவி சந்திரகலா, மகள் தீபா, மகன் அரிகிருஷ்ணன். நான், ஆட்டோ மொபைல் வைக்க ரூ.10 லட்சம் கடன் வாங்கினேன்.

கடன் பெறுவதற்கு உதவி செய்வதாக கூறி செங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கடன் பணம் ரூ.10 லட்சத்தையும் என்னிடம் இருந்து காசோலைகளை பெற்று மோசடி செய்து விட்டார்.

நான், ஏற்கனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்காததால் மனைவி, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, மெக்கானிக் சேட்டுவை குடும்பத்துடன் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News