செய்திகள்

நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு - ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2018-08-04 06:30 GMT   |   Update On 2018-08-04 06:30 GMT
தொடர்விடுமுறை காரணமாக இன்று 2-வது நாளாக ஒகேனக்கலில் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், சேலம், நாமக்கல் உள்பட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலங்களில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்பட அணைகள் நிரம்பின. அதில் இருந்து உபரி நீரை காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடக -தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு படிப்படியாக நீர்வரத்து சரிந்து நேற்று 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மீண்டும் கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரித்ததால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு 17 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 19 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து காரணமாக ஒகேனக்கலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நேற்று ஆடிப்பெருக்கு விழா தொடங்கப்பட்டது. இந்த விழா தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. விழாவை யொட்டி ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

வெள்ளப்பெருக்கின் போது மெயினருவியில் தடுப்பு கம்பிகள் சிதலமடைந்ததாலும், நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

மெயினருவிக்கு செல்லும் பாதையில் நுழைவு வாயின் அருகே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். அதில் அவர்கள் குளித்து விட்டு காவிரி அன்னையை வணங்கினர்.

மேலும், பரிசல் இயக்கமும் நேற்று தொடங்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வழக்கமான பரிசல் நிலையத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலாக மாற்று இடமான கோத்திக்கல் பாறையில் இருந்து நேற்று பரிசல் இயக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

தொடர்விடுமுறை காரணமாக இன்று 2-வது நாளாகவும் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்பட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மெயினருவிக்கு செல்லும் நடைபாதை அருகே மற்றும் முதலை பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு இவர்கள் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் தடையை மீறி செல்லாமல் இருக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் சிறுவர் பூங்காவில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று 2-வது நாளாக நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

இன்றும், நாளையும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் நிலை உள்ளதால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றின் கரையோரம் போன்ற தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் குளிப்பவர்களை மீட்க போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று விடுமுறையின் காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகளால் மீன் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சிலர் குடும்பத்துடன் வந்து சமையல் செய்து அங்கேயே சாப்பிட்டு சென்றனர். பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக வனப்பகுதி பயணியர் மாளிகை அருகே வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery


Tags:    

Similar News