செய்திகள்

2-வது நாளாக லாரி ஸ்டிரைக் - சிவகாசியில் பட்டாசுகள் - தீப்பெட்டிகள் தேக்கம்

Published On 2018-07-21 04:55 GMT   |   Update On 2018-07-21 04:55 GMT
2-வது நாளாக லாரி ஸ்டிரைக் காரணமாக சிவகாசியில் பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டிகள் தேக்கமடைந்துள்ளன. #LorryStrike

விருதுநகர்:

டீசல், பெட்ரோல் விலையை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும். சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். டீசல், பெட்ரோலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்.

3-ம் நபர் காப்பீட்டு தொகை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் 90 சதவீத லாரிகள் ஓடவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் வடமாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து பட்டாசுகள் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இதேபோல் தாயில்பட்டி, சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து வழக்கமாக தீப்பெட்டிகள் நாள் தோறும் வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும். ஆனால் லாரி ஸ்டிரைக் காரணமாக தீப்பெட்டிகளையும் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் பல கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து பருப்பு வராததால் அதன் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சிவகங்கையில் இன்றும் 75 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குலளில் இருந்து விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை.

சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட வில்லை. ராமநாதபுரத்திலும் இதே நிலை தான் நீடித்தது. லாரி ஸ்டிரைக்கால் காய்கறி, பலசரக்கு பொருட்களின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. #LorryStrike

Tags:    

Similar News