செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2018-07-20 09:07 GMT   |   Update On 2018-07-21 02:36 GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkalfalls
தருமபுரி:

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது.

காலை 8 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

நேற்று இரவு படிப்படியாக திடீரென்று நீர்வரத்து அதிகரித்து இன்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டு இருந்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை பூட்டி சீல் வைத்து போலீசார் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல்லுக்கு கார், வேன், இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மடம் சோதனைச்சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் தர்மபுரி, பென்னாகரத்தில் இருந்து பஸ்கள் மூலம் ஒகேனக்கல்லுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பரிசல் இயக்கவும், மெயின் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை இன்று 12-வது நாளாக நீடித்தது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் அளந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  #Hogenakkalfalls

Tags:    

Similar News