செய்திகள்

மத்திய அரசு திட்டத்தில் ரூ.174 கோடியில் மீனவர் நலத்திட்டங்கள் - நாராயணசாமி தகவல்

Published On 2018-07-14 10:25 GMT   |   Update On 2018-07-14 10:25 GMT
புதுவையில் மீனவர்களுக்கு காப்பீடு, படகு, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்டவற்றை வழங்க ரூ.174 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

ஜெயமூர்த்தி: கடந்த காலங்களில் வலை, பைபர் கட்டுமரம் வாங்க தரப்பட்ட மானியம் இப்போது அரசால் நடைமுறைபடுத்தப்படவில்லை. இதை வழங்க அரசு முன்வருமா?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: மத்திய அரசு நீல புரட்சி என்ற திட்டத்தை கொண்டுவர உள்ளனர். இதன்கீழ் புதுவையில் மீனவர்களுக்கு காப்பீடு, படகு, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்டவற்றை வழங்க ரூ.174 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பியுள்ளோம். மத்திய அரசு இதற்கு ஒப்புதல் தருவதாகவும் கூறியுள்ளது. இந்த நிதி வந்தவுடன் பைபர் படகு வாங்க நிதிஅளிப்போம்.

அன்பழகன்: பட்ஜெட்டில் மீனவர்களுக்கு ரூ.38 கோடி தான் நிதி ஒதுக்குகிறீர்கள். துறையின் ஊழியர்களுக்கு சம்பளம், தடை கால நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு ரூ.25 கோடி செலவாகிவிடும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இதனால் இலவச திட்டங்களை நிறுத்திவிட்டு வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்துங்கள். படகு, வலை வாங்க கடன், மானிய திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.

நாராயணசாமி: மீனவர்களுக்கு தனி கவனம் செலுத்தவுள்ளோம். மத்திய அரசின் நிதி கிடைத்தவுடன் அவர்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.
Tags:    

Similar News