செய்திகள்
ஓமலூர் கோர்ட்டில் சீமான் ஆஜராக வந்த காட்சி

3 பிரிவுகளில் வழக்கு: ஓமலூர் கோர்ட்டில் சீமான் ஆஜர்

Published On 2018-07-12 10:13 GMT   |   Update On 2018-07-12 10:36 GMT
அரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சீமான் இன்று ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். #Seeman
ஓமலூர்:

சேலம் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 160 ஏக்கர் நிலப்பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் தற்போது மத்திய, மாநில அரசுகள் இந்த விமான நிலையத்தை விரிவாகம் செய்ய முடிவு செய்தது.

அதன்படி அதனை சுற்றியுள்ள காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிபாடி ஆகிய 4 கிராமங்களில் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறது.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலைய விரிவாக்க எதிர்ப்பு இயக்கம் என ஆரம்பித்து பல்வேறு கட்ட போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

கடந்த மே மாதம் 12-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலைய விரிவாக்கத்தினால் நிலம் பறிபோகும் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டூர் கிராமத்தில் கலந்துகொண்டு பேசினார்.

இதில் அவர், அரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டியதாகவும் என 143- சட்ட விரோதமாக கூடுதல், 188-அரசுக்கு எதிராக தூண்டுதல், 506(1) மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அப்போது, ஓமலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்க அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து இன்று காலையில் சீமான் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போடுமாறு சீமானுக்கு உத்தரவிட்டார்.  #seeman
Tags:    

Similar News