செய்திகள்

சட்டசபை வளாகத்துக்கு கருப்பு சட்டை அணிந்து வருபவர்களிடம் போலீசார் அதிரடி சோதனை

Published On 2018-07-05 05:28 GMT   |   Update On 2018-07-05 05:28 GMT
சட்டசபை வளாகத்துக்குள் கருப்பு சட்டை அணிந்து வருபவர்கள் திடீரென போராட்டம் நடத்திவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட பிறகு உள்ளே அனுமதிக்கின்றனர். #TNAssembly
சென்னை:

சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால் தலைமைச் செயலக வளாகத்திற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் வருகிறார்கள். இதுதவிர பொதுமக்களும் வருகின்றனர்.

இதில் சிலர்தான் தலைமைச் செயலகத்திற்குள் செல்கிறார்கள். மற்றவர்கள் ஆங்காங்கே மரத்தடியில் நின்று கொள்கின்றனர்.

தற்போது ஒவ்வொரு பிரச்சினைக்கும் திடீர் திடீரென போராட்டம் நடைபெறுவதால் கோட்டையை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சட்டசபைக்கு வெளியே யாராவது திடீரென போராட்டம் நடத்திவிடக் கூடாது என்பதற்காக ஏராளமான போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது நுழைவு வாயில் வழியாக நடந்து செல்பவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட பிறகுதான் உள்ளே அனுமதிப்பது பற்றி முடிவு செய்கின்றனர்.

ஏனென்றால் கருப்பு சட்டையுடன் உள்ளே வந்து போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதில் போலீசார் ஊஷாராக உள்ளனர்.

இதுபற்றி சட்டசபை செயலக அதிகாரியிடம் கேட்டதற்கு கருப்பு சட்டை அணிந்து வருபவர்களை உள்ளே விடக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆனால் சட்டசபை நிகழ்ச்சிகளை மாடத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் உள்ளது. கருப்பு சட்டை போடக் கூடாது, செல்போன் கொண்டு வரக்கூடாது, கைப்பை எடுத்து வரக் கூடாது என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. சட்டசபைக்கு வெளியே எந்த கட்டுப்பாடும் இல்லை. போலீசார்தான் அதை கவனிப்பார்கள் என்றார்.



இதுபற்றி கோட்டை போலீசாரிடம் கேட்டதற்கு எம்.எல்.ஏ.க்கள் சில நேரம் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து வருகிறார்கள். மற்றவர்கள் யாராவது கருப்பு சட்டை அணிந்து வந்தால் எதற்காக நீங்கள் வருகிறீர்கள் என்று கேட்பது வழக்கம்தான்.

தலைமைச் செயலக வளாகம் என்பது பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும். அங்கு யாரும் ஒன்றுகூடி போராட்டம் நடத்தக் கூடாது என்பதால்தான் கருப்பு சட்டை அணிந்து வருபவர்களை விசாரித்து அனுப்புகிறோம் என்றனர். #TNAssembly

Tags:    

Similar News