செய்திகள்

புதுவையில் தனியார் டவுன் பஸ்கள் ஸ்டிரைக்

Published On 2018-03-02 06:55 GMT   |   Update On 2018-03-02 06:55 GMT
புதுவையில் தனியார் டவுன் பஸ்களின் திடீர் ஸ்டிரைக்கால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

புதுச்சேரி:

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நகர பகுதிகளுக்கும் மற்றும் கிராம பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.அரசு பஸ்களை காட்டிலும் தனியார் டவுன் பஸ்களிலேயே பயணிகள் அதிக அளவு பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் புதிய பஸ் நிலையத்தில் முத்தியால்பேட்டை- லாஸ்பேட்டை வழியாக கோரிமேட்டுக்கு செல்ல 2 தனியார் பஸ்களில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர்.

ஆனால், டைமிங் பிரச்சினை காரணமாக இந்த 2 பஸ் டிரைவர்கள்- கண்டக்டர்கள் பஸ்களை வெகுநேரமாக எடுக்க வில்லை.

இதனால் பஸ்களில் அமர்ந்திருந்த பயணிகள் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் 2 பஸ்களிலும் விளக்கை அணைத்து விட்டு பஸ்களில் இருந்த பெயர் பலகையை கழற்றி புறக்காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது அந்த பெயர் பலகை உடைந்து சேதமாகியது.

இந்த நிலையில் போலீசாரின் இந்த செயலை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் தனியார் டவுன் பஸ் டிரைவர்கள்- கண்டக்டர்கள் பஸ்களை இயக்காமல் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

பஸ்கள் அனைத்தையும் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தாமல் ரோடியர் மில் திடலுக்கு கொண்டு வந்தனர். அங்கு பஸ்களை வரிசையாக நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

ஸ்டிரைக்கில் ஈடுபட்ட டிரைவர்கள்- கண்டக்டர்களிடம் உருளையன்பேட்டை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் இன்ஸ்பெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மற்றும் சம்பந்தப்பட்ட போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

தனியார் டவுன் பஸ்களின் திடீர் ஸ்டிரைக் கால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

Tags:    

Similar News