செய்திகள்

அரசியல் பயணத்தின் இடையே சொந்த ஊர் மக்களை சந்தித்தார் கமல்

Published On 2018-02-21 10:09 GMT   |   Update On 2018-02-21 10:09 GMT
அரசியல் பயணம் தொடங்கிய நடிகர் கமல், மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் தனது சொந்த ஊர் மக்களை சந்தித்தார். #KamalHaasan #KamalPartyLaunch
பரமக்குடி:

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பின்னர், தனது பயணத்தை தொடர்ந்தார்.



மதுரை பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் தனது சொந்த ஊரான பரமக்குடியில் அவர் மக்கள் மத்தியில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. கமல் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்படி பரமக்குடிக்கு இன்று அவரது வாகன அணிவகுப்பு வந்ததும். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கமலை உற்சாகமாக வரவேற்றனர். ஆனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி கமல் பேசவில்லை. வாகனத்தில் நின்றபடியே சிறிது நேரம் பேசினார்.

அப்போது, விழாவிற்கு நேரமாகிவிட்டதால் மேடைக்கு வர இயலவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி, என்று கூறிய கமல் அங்கிருந்து மதுரை புறப்பட்டார். மதுரையில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்ய உள்ளார்.

1995-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கமல் தனது சொந்த ஊருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.  #KamalHaasan #KamalPartyLaunch #tamilnews
Tags:    

Similar News