செய்திகள்

மதுரவாயல் சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேரும் லாரி ஏற்றி கொலையா?

Published On 2018-02-21 08:55 GMT   |   Update On 2018-02-21 08:55 GMT
மதுரவாயல்- தாம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் லாரி மோதி 2 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

போரூர் அருகே மதுரவாயல்- தாம்பரம் பைபாஸ் சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று அதிகாலை வண்டலூரில் இருந்து மாதவரம் நோக்கி டாரஸ் லாரி வந்து கொண்டிருந்தது.

சுங்கச்சாவடியின் 5-வது கவுண்டரில் லாரி வந்தபோது வரிவசூலிக்கும் கவுண்டர் மீது திடீரென்று பயங்கரமாக மோதியது. அந்த அறை முழுவதும் நொறுங்கியது.

இதில் வசூல் மையத்துக்கு வெளியே நின்று கட்டணம் வாங்கி கொடுத்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் தமார் டக்குவா(24) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் அங்கு பணியில் இருந்த ஒடிசாவை சேர்ந்த சந்தீர்செட்டி (32), நில்மதுஷா (18), மணி (53) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நில்மதுஷா பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்து உள்ளது. காயம் அடைந்த மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் சக்திவேலை கைது செய்தனர். அவர் தூக்க கலக்கத்தில் லாரியை வேகமாக இயக்கியதால் விபத்து நடந்ததாக கூறி உள்ளார்.

விபத்து நடந்த போது சுங்கச்சாவடியில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்படுத்திய லாரி சுங்கச்சாவடி கவுண்டருக்குள் சென்றபோது எந்த வாகனமும் அங்கு இல்லை. எனவே பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் லாரியை ஏற்றி ஊழியர்கள் 2 பேரும் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரவாயல் சுங்கச்சாவடியில் உள்ள கவுண்டர்களில் ஊழியர்கள் சரிவர பணியில் இருப்பதில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனால் சுங்க கட்டணம் கொடுக்க நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News